Sunday 26 July 2015

இஷ்டு


                                                     இஷ்டு
                                                     ----------


அண்மையில் பாலக்காடு சென்றிருந்தபோது நண்பன் மதுசூதனனின் காருண்யா இல்லத்தில்காலை உணவு உட்கொண்டோம் தோசையுடன் தொட்டுக்கொள்ள ஒரு பதார்த்தம் வைத்தார்கள் கேரளத்தில் இது நன்றாக அறியப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் எப்படி என்று தெரியாது. என் வீட்டிலும் அவ்வப்போது மனைவி செய்வாள் அதன் செய்முறைக்கு முன் அதன் பெயர் பற்றி ஓரிரு வார்த்தைகள் மலையாளிகள் இதனை இஷ்டு என்கின்றனர். அதென்ன அப்படி ஒரு பெயர் என்று ஆராயப் போனாலது ஆங்கில ஸ்ட்யூ(STEW)  வின் மருவல் எனப் புரிந்தது.

இனி தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய் பெரிதாக நறுக்கியது வெங்காயம் நறுக்கியது , உருளைக் கிழங்கு வேகவைத்துத் தோல் உரித்தது, சிறிது இஞ்சி, தேங்காய் துருவி எடுத்து அதிலிருந்து பிழிந்தெடுத்த பால் கொஞ்சம் , சிறிது தேங்காய் எண்ணை. கருவேப்பிலை

செய்முறை

பச்சைமிளகாய் வெங்காயம் இஞ்சி ஆகியவற்றை கொதிக்க வைத்த நீரில் வேகவிடவும் நன்கு வெந்தபின் வேகவைத்து தோலுரித்த உருளைக் கிழங்கை பொடியாக நறுக்கித் தூவி விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்  இந்தக் கலவையில்  ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும் இது ஒரு கொதி வரும் நிலையில் இறக்கி வைத்து சிறிது தேங்காய் எண்ணை கருவேப்பிலை சேர்க்கவும் காலை உணவுக்குத் தொட்டுக்கொள்ள இஷ்டு தயார் இட்லிக்கோ தோசைக்கோ ஆப்பத்துக்கோ தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்  என்ன நண்பர்களே செய்து பார்க்கிறீர்களா. .       
 






14 comments:

  1. எங்கள் மலையாள நண்பர் ஒருவர் நீண்ட நாட்களுக்கு முன்னால் செய்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கின்றேன். செய்முறை இப்போது குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ஸ்ட்யூ - இதற்கு தமிழ் பெயர் என்னவென்று தெரியவில்லை. இதில் உள்ள ருசிக்குக் காரணம் தேங்காய்ப்பால். அதிகமாக விட்டால் ருசி கூடும். எங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு தவிர முருங்கைக் காயை வைத்தும் செய்வோம்.

    ReplyDelete
  4. ஆமாம் சார் இது ஸ்ட்யூ. நீங்கள் ஒன்று கவனித்திருக்கின்றீர்களா? கேரளத்து வழக்கங்களுக்கும்ம், கன்னியாகுமரி வழக்கங்களுக்கும், இலங்கை பழக்க வழக்கங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக...உடை, மொழி அக்சென்ட், சில வார்த்தைகள், குறிப்பாக உடை உணவு முறைகளில் நிறைய ஒற்றுமைகள் பேர்தான் வித்தியாசம்.

    சொதி என்ற ஒரு டிஷ் இதே போன்றுதான் ஆனால் அது இலங்கையில் செய்யப்படுவது இடியாப்பத்திற்குத் தொட்டுக் கொள்ள நல்ல பதார்த்தம்.

    தேங்காய் எண்ணையில், சிவப்பு மிளகாய், மெயின் இதுதான், கூடுதலாக பச்சை மிளகாய் சேர்க்கலாம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அது சிவந்து வரும் நேரம். உரித்து வைத்திருக்கும் சிறிய வெங்காயம் போட்டு வதக்கி, (தக்காளி வேண்டும் என்றால் ஒன்றே ஒன்று சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்த்துக் கொள்ளலாம், இல்லாமலும் செய்யலாம்) வதங்கியதும், வெந்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கை துண்டுகளாக்கி அதில் போட்டு கலந்து விட்டு, ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்திருக்கும் 3 தேங்காய்பால், முதல் பால், 2 ஆம் பால், 3 ஆம் பால் ...இதில் முதலில் 3 ஆம்பாலைச்சேர்த்து தண்ணீரும் கூட சேர்த்து கொஞ்சம் கொதிக்க வைத்து உப்பும் போட்டும், பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து 2 ஆம் பாலை விட்டு சிறிது கொதித்ததும் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு, அந்தக் கொதி சிறிது அடங்கியதும் முதல் பால் விட்டு நன்றாகக் கலக்கி விட வேண்டும். இப்போது மீண்டும் சூடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்தச் சூடே போதும். தக்காளி சேர்க்கவில்லை என்றால் அடுப்பிலிருந்து இறக்கிய பின் சிறிது நேரம் கழித்து எலுமிச்சம் பழம் பிழிந்தும் சேர்க்கலாம்....மிக மிக அருமையான பதார்த்தம்

    இதையே கேரளத்தில் ஸ்ட்யூவில் வெங்காயம், உருளையுடன் காரட், பட்டாணி , பீன்ஸ் சேர்த்தும் செய்வதுண்டு...

    கீதா

    ReplyDelete
  5. இஷ்டு இஷ்டமான உணவு என்பதும் பொருத்தமாக உள்ளது

    ReplyDelete
  6. கந்தசாமி ஐயா சொன்னது போலும் முருங்கை, காரட், பீன்ஸ் சேர்த்து வெங்காயத்துடன், கடுகு கறிவேப்பிலை தாளித்து காய்களை வதக்கி தேங்காய் பால் சேர்த்து பால் கறி என்று இலங்கையில் செய்வதுண்டு...அதுவும் மிகவும் சுவையாக இருக்கும்..

    கேரளத்தில் ஓலன் கூட ஆனால் இந்தக் காய்கள் இல்லாமல்...இப்படி பலவித பெர்மியூட்டேஷன் காம்பினேஷனில் அந்தந்த ஊர்களுக்கு ஏற்ற வகையில் பல பதார்த்தங்கள் வெவ்வெறு பெயர்களில் உருவாகி உள்ளன இல்லையா சார்?
    கீதா

    ReplyDelete
  7. திருநெல்வேலியில் ஜானகிராமன் ஓட்டலில் சாப்பிட்டிருக்கேன். சொதி என்றார்கள். பூண்டு இருந்தது. பூண்டு வாசனை அவ்வளவாகப் பிடிக்காது!

    ReplyDelete
  8. சொதி என்று இங்கும் செய்வார்கள்... ஆனால் தொட்டுக் கொள்ள அல்ல... அப்படியே...!

    இஷ்டு - நன்றி ஐயா...

    ReplyDelete
  9. சொதி செய்வேம் .... மதியம் சாப்பிட
    மண்டி செய்வோம் தொட்டுக் கொள்ள
    இஷ்டு செய்து பார்க்க வேண்டும் ஐயா. நன்றி

    ReplyDelete
  10. உருளைக்கிழங்கு இல்லாமல் தக்காளியுடன் தேங்காய்ப் பால் சேர்த்து செய்வேன்.. அதற்கு இஷ்டு என்றெல்லாம் பெயர் கிடையாது..

    தேங்காயெண்ணெயில் தாளிப்பதும் இல்லை.. அவசரத்திற்கு செய்வது.. பாஸ்மதி சோற்றுக்கு நன்றாக இருக்கும்..

    ஒவ்வொன்றும் புதுமை தானே!..

    ReplyDelete
  11. இஷ்டு சாப்பிட்டதுண்டு. மலையாள நண்பர் வீட்டில்.

    சொதி - நாகர்கோவில் பக்கமும் செய்வார்கள்.... அதுவும் சாப்பிட்டதுண்டு.

    ReplyDelete
  12. இஷ்டுவா செய்து பார்த்திட வேண்டியது தான் இலகுவான செய்முறை தானே. நன்றி ஐயா !

    ReplyDelete
  13. இஷ்டு என்ற பெயரைப் பார்த்ததும் ஏதோ இனிப்பு என்று நினைத்தேன். இதுவரை கேள்விப்படாதது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete